உலகத் தமிழ்ச் சங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம் வரலாறு

⦿ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் “உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின்கீழ் செயல்படும் வகையில் உலகத்தமிழ்ச் சங்கம் இயங்கும்” என 1981 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் நடைபெற்ற 5வது உலகத்தமிழ் மாநாட்டில் அறிவித்தார்.

⦿ மதுரையிலுள்ள தல்லாகுளம் பகுதியில் 14.15 ஏக்கர் நிலம் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென ஒதுக்கப்பட்டது.

⦿ 1986ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் (14.04.1986) அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள் உலகத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

⦿ இசையரங்கு, ஆடலரங்கு, பாட்டரங்கம், வில்லிசை, இன்னிசை, கருத்தரங்கு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

⦿ “உலகத்தமிழ்ச்சங்கம் மதுரையில் புதுப்பொலிவோடும் சிறப்போடும் செயற்படும்” – என 2012ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார். (தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை (தவ2.2), (அரசாணை (நிலை)எண்.234 நாள்:12.07.2012)

நோக்கம்

⦿ உலக நாடுகளில் இயங்கி வரும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தமிழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஆகியவை பற்றிய விவரங்களைத் தொகுத்தல்.

⦿ உலகமெங்கும் இயங்கிவரும் இவ்வமைப்புகளை ஒரு குடையின்கீழ் பதிவு செய்து ஒருங்கிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்குதல்.

⦿ தமிழறிஞர்கள், கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பித் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிப் பரப்புதல்.

⦿ தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் அயல் நாடுகளுக்கு ஆய்வாளர்கள் அனுப்பித் தமிழர் நிலையினை ஆய்தல், அந்நாட்டு ஆய்வாளர்களைத் தமிழகத்திற்கு வரவழைத்துக் கருத்துப் பரிமாறுதல்.

⦿ பிறநாட்டுத் தமிழர் களஞ்சியம் தயாரித்தல்.

⦿ தமிழ் மொழியிலுள்ள சங்க கால நூல்கள், இலக்கியங்கள் போன்றவற்றை அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் அறிந்து தெளிய வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.

⦿ உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கைகள் எடுத்தல்.

⦿ உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் இரு நாடுகளைத் தேர்வு செய்து ஒவ்வோர் ஆண்டும் ஆய்வரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடத்துதல்.

⦿ கலைநுட்பம் வாய்ந்த சிற்பங்கள், நாட்டுப்புறப்பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் கண்டு பாராட்ட வாய்ப்பு ஏற்படுத்துதல்.

⦿ உலக நாடுகளின் அருங்காட்சியகங்களில் இடம் பெற்றுள்ள தமிழ் தொடர்பான ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், அரிய கலைப் பொருட்கள் முதலிய தரவுகளைத் திரட்டுதல்.